விளையாட்டு

பீடா கடை உதவியாளர் டூ காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம்! 21 வயதான சங்கேத் சர்கார் வென்ற கதை!

ச. முத்துகிருஷ்ணன்

பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 55 கிலோ எடை தூக்கும் போட்டியில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் சங்கேத் சர்கார் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு 2022 இல் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆண்களுக்கான 55 கிலோ எடை தூக்கும் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் சங்கேத் சர்கார் ஸ்நாட்ச் பிரிவில் 113 கிலோவை அசால்ட்டாக தூக்கி, மலேசியாவின் அனிக் முகமதுவை (ஸ்நாட்ச் பிரிவில் 107 கிலோ) விட 6 கிலோ முன்னிலை பெற்றிருந்தார். இதையடுத்து நடந்த க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் அனிக் முகமது 142 கிலோவை அசால்ட்டாக தூக்க, தங்கம் வெல்ல வேண்டும் என்றால் சங்கேத் சர்கார் 139 கிலோவை தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் முயற்சியில் 135 கிலோவை தூக்கிய அவர் அடுத்த முயற்சியில் 139 கிலோவை தூக்க முற்பட்டபோது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் காயத்தை பொருட்படுத்தாமல் 139 கிலோவை தூக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரால் அடுத்த முயற்சியிலும் 139 கிலோவை தூக்க முடியாமல் போகவே இருவரும் சமமான எடையை தூக்கியிருந்தனர். புள்ளிகளின் அடிப்படையில் மலேசியாவின் அனிக் முகமதுவிற்கு தங்கப்பதக்கமும், சங்கேத் சர்க்காருக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

யார் இந்த சங்கேத் சர்க்கார்?

தனது 13 வயதில் மல்யுத்தத்தில் ஈடுபட்ட சங்கேத் சர்கார், காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 உட்பட முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார். பளுதூக்கும் போட்டியில் தேசிய சாம்பியனான சங்கேத் சர்கார், கேலோ இந்தியா யூத் கேம்ஸ் மற்றும் 2020ல் கேலோ இந்தியா யுனிவர்சிட்டி கேம்ஸ்களில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு சாங்லி பகுதியில் பீடாக்கடை மற்றும் உணவுக் கடை வைத்திருக்கும் தனது தந்தைக்கு உதவியாளராகப் பணியாற்றுவது சங்கேத்தின் வழக்கம்! தனது நெடுநாள் கனவான காமன்வெல்த் பதக்கத்தை வென்றுள்ள சங்கேத் சர்கார், அடுத்தபடியாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டு பயணிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.