விளையாட்டு

இன்று முதல் டெஸ்ட்: தக்க வைக்க நினைக்கும் இந்தியா, தகர்க்க துடிக்கும் இலங்கை

இன்று முதல் டெஸ்ட்: தக்க வைக்க நினைக்கும் இந்தியா, தகர்க்க துடிக்கும் இலங்கை

webteam

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. அங்கு மழை பெய்து வருவதால் போட்டி பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை என்ற நிலையை தகர்க்கும் நோக்கில் இலங்கை அணி களமிறங்குகிறது. இலங்கை அணியின் திரிமன்னே, மேத்யூஸ், திக்வில்லா, கருணாரத்னே போன்ற வீரர்கள் பார்மில் உள்ளனர். ஹெராத், தனஞ்செயா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை அந்த அணி அதிகம் நம்பியுள்ளது. அதோடு பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் போட்டியை அந்த அணி கைப்பற்றி இருப்பதால் நம்பிக்கையோடு இன்றும் களமிறங்கும். 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, அதை தக்கவைக்கும் நோக்கத்தில் இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் கழற்றிவிடப்பட்ட அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது இந்திய அணியின் பலத்தை அதிகரித்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள தமிழக வீரர் முரளி விஜய் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தாவில் மழை பெய்துவருவதால் பயிற்சியில் வீரர்கள் நேற்று பங்கேற்கவில்லை. மழை இன்றும் தொடர்வதால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.