உலக கோப்பை போட்டியில் இதுவரை இந்தியாவை வென்றதில்லை என்ற நிலையை இந்த முறை மாற்றுவோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தேர்வுக்குழு தலைவருமான இன்ஜமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை மக்கள் தீவிரமாக கவனிக்கிறார்கள். உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சி அடைவோம். உலக கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றதில்லை. அந்த மோசமான சாதனையை இந்த உலக கோப்பையில் முறியடிப்போம் என்று நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மட்டுமல்ல, எல்லா ஆட்டங்களும் எங்களும் முக்கியம். எந்த அணிகளையும் வெல்லும் திறமையான வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள்.
உலக கோப்பை போட்டிக்கான அணியை, நெருக்கடிக்கு மத்தியில்தான் தேர்வு செய்தோம். திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கு கடினமாக இருந்தது. சிலரை நீக்கிவிட்டு, முகமத் ஹஸ்னனை தேர்வு செய்துள்ளோம். அவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார்.
உலக கோப்பை போட்டியில் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். எந்த அணியை வென்றாலும் கிடைப்பது 2 புள்ளிகள்தான். எல்லா அணியையும் சமமாக எடுத்துக்கொள்வோம். ஆப்கானிஸ்தான் கூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்க நினைக்கிறோம். எனது கணிப்புப் படி, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்’’ என்றார்.
இந்த உலக கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடக்கிறது. உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி, இதுவரை இந்தியாவை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.