ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகப் புகழ்ந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங் சில் 151 ரன் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதன் மூலம், முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 261 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன் கூறும்போது, ‘’இந்த தோல்வி ஏமாற்றத்தைத் தந்தது. நாங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடினோம். அடுத்த போட்டியில் பங்கேற்கும் முன் பாசிட்டிவான விஷயங்கள் தேவை. அடுத்து பெரும் சவால் எங்களை நோக்கி காத்திருக்கிறது. இந்தப் போட்டியில், பேட்டிங் ஆர்டர் பற்றி விவாதித்தோம். இருந்தாலும் பிட்ச்சின் தன்மை வித்தியா சமாகி விட்டது. இதனால், அடுத்து சிறந்த பார்முலா பற்றி முடிவு செய்ய வேண்டும். இந்த பிட்ச் மோசம் என்று சிலர் சொன்னாலும் இது சிறந்த பிட்ச். நான் டாஸ் வெல்லாதது மகிழ்ச்சிதான். வென்றிருந்தாலும் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்பேன். கம்மின்ஸ் சிறப்பாக செயல்பட்டார்’’ என்றார்.