இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சிட்னி மைதானத்தில் விளையாட உள்ளது. காயத்தினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாத ரோகித ஷர்மா முதல் இரண்டு போட்டிகளையும் அதனால் மிஸ் செய்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான பேட்டிங் ஆவரேஜை கொண்டவர் ரோகித் ஷர்மா. அதனால் அவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட் உலகின் தரமான பேட்ஸ்மேனான ரோகித் ஷர்மாவை வீழ்த்த திட்டங்கள் வகுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.
“உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்தான் ரோகித் ஷர்மா. அவருக்கு எதிராக பந்து வீசுவது எங்களுக்கு சவாலாக இருக்கும். இருப்பினும் எங்களுக்கு சவால் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் ஒரு கை பார்ப்போம். அவரது விக்கெட்டை வீழ்த்த திட்டங்களை வகுத்துள்ளோம். இந்திய அணிக்கு அவரது வருகை உத்வேகத்தை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார் நாதன் லயன்.