‘இந்திய கிரிக்கெட் அணியில் சோதனை முயற்சிகள் தவிர்க்க முடியாதது’ என்று கேப்டன் விராத் கோலி கூறினார்.
இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மனதில் வைத்து அணியில் பல சோதனை முயற்சிகளை செய்து வருகிறோம். அது தவிர்க்க முடியாது. இதற்கு முன், ரஹானேவை இன்னொரு தொடக்க ஆட்டக்காரராகத்தான் பார்க்கிறேன் என்று சொன்னேன். இப்போது அவரை நான்காவது வீரராக களமிறக்க முடிவு செய்துள்ளோம். அந்த இடம் முக்கியமான ஒன்று. அதற்கு அவர்தான் சிறப்பான வீரராக இருக்கிறார். 2015 உலகக் கோப்பைக்கு முன் அவர் நான்காவது வீரராகத்தான் களமிறங்கினார். வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அணியில், எப்போது வேண்டுமானாலும் மாற்றம் நடக்கலாம். அது தவிர்க்க முடியாதது. அணி முடிவு செய்தால் மாற்றம் உண்டு. நமது அணியில் சேஹல், குல்தீப் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே வித்தியாசமான பந்துவீச்சாளர்கள். ஒருவர் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசுபவர், இன்னொருவர் ’சைனாமேன்’ வகை பவுலர். இப்படி வெரைட்டியான பந்துவீச்சாளர்களைக் கொண்டது நமது அணியாகத்தான் இருக்கும்’ என்றார்.