வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்-சைதான் நாங்கள் கேட்டோம்; இது போன்ற பிட்ச் கேட்கவில்லை என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறினார்.
தென்னாப்பிரிக்கா- இந்திய இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது. மோசமான பிட்ச் காரணமாக வீரர்களுக்கு நேற்று காயம் ஏற்பட்டது. ரபாடா வீசிய பந்தில் இந்திய வீரர்கள் முரளி விஜய், விராத் கோலி, ரஹானே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் காயமடைந்தனர். பும்ரா வீசிய பந்தில் எல்கர் காயமடைந்தார். முதல் இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா வீசிய பந்து அம்லாவை தாக்கியது.
ஆடுகளம் தாறுமாறாக எகிறுவதால் வீரர்கள் காயமடைவது குறித்து நடுவர்கள் விவாதித்தனர். பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் போட்டி நேற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பிட்ச் பற்றி, தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கிப்சன் கூறும்போது, ’ஆடுகளத்தில் புற்கள் இருப்பதை பெரிய பிரச்னையாக எல்லோரும் பேசுகின்றனர். நாங்கள் கேட்டது இது போன்ற பிட்ச் அல்ல. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பவுன்ஸ் பிட்ச்தான் கேட்டிருந்தோம். ஆனால் பிட்ச் இப்படியானது எதிர்பாராதது. இதனால் இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் உடலில் பந்துபட்டது. இதுபற்றி நாங்கள் புகார் எதுவும் சொல்லவில்லை. போட்டி தொடர வேண்டும் என்றே விரும்புகிறோம்’ என்றார்.