2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த 5 மாதங்களில் கண்டறியப்படும் என தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்தார்.
இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடருக்கான வீரர்கள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டனர். இதில் மூத்த வீரர் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. அவரைப் போலவே தோனியின் இடமும் கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறப்பட்டது.
இதுபற்றி தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்திடம் கேட்டபோது, ’தோனி லெஜண்ட். அவர், தானாக அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் உட்பட அனைத்து வீரர்கள் பற்றியும் பேசி முடிவெடுத்துதான் வீரர்களை அறிவித்திருக்கிறோம். வயதாகிவிட்டது என்பது பற்றி கேட்டால், டென்னிஸ் வீரர் அகாசி வாழ்க்கையைதான் உதாரணமாக சொல்ல முடியும். அவரது புத்தகத்தை இப்போதுதான் வாசித்தேன். 30 வயதுக்கு மேல்தான் அவர் விளையாட்டு வாழ்க்கை ஆரம்பமாகி இருக்கிறது. 36 வயது வரை விளையாடி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். அதனால் விளையாட்டில் என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? இந்திய கிரிக்கெட் அணி நன்றாக விளையாட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். தோனி சிறப்பாக விளையாடினால் நல்லதுதானே. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்க இருக்கிறோம். அதனால் தான் இலங்கை அணியுடனான தொடரில் அஷ்வின், ஷமி, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தான் யுவராஜ் சிங்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அணியில் இணைய மீண்டும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.