விளையாட்டு

ஸ்டம்பிங்கில் தோனியையே விஞ்சிவிட்டாரா?! ரிஷப் பண்ட் செய்த 2 தரமான சம்பவங்கள்!

சங்கீதா

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த இரண்டு தரமான சம்பவங்கள் தான் நெட்டிசன்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில், தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றும் நோக்கில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஜஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு துவங்கிய முதல் டெஸ்ட் தொடரில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் சுழற் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்பிறகு இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக 3-வது நாள் ஆட்டத்தின் போது அறிவித்தது. இதன்மூலம் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலை வகித்தது.

இதையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய வங்கதேச அணி, 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 25 ரன்களுடனும், ஜாகீர் ஹசன் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் பாலோ-ஆன் ஆன நிலையில், தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன் சாண்டோ – ஜகீர் ஹசன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தனர். மேலும் நிலைத்து நின்று விளையாடி இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் விளாசினார். இந்த ஜோடியை உடைக்க இந்திய வீரர்கள் போராடி வந்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ.

இந்த விக்கெட்டின்போது, விராட் கோலி கேட்ச்சை தவறவிட, பக்கத்தில் நின்ற ரிஷப் பந்த் லாவகமாக கேட்ச் பிடித்து கூட்டணியை உடைத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர் வந்த யாசிர் அலி 5 ரன்களிலும் , லிட்டன் தாஸ் 19 ரன்களிலும், ஜாகீர் ஹசன் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த நிலையிலும், ரஹீம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் நுரூல் ஹசன் 3 ரன்கள் எடுத்தநிலையில், அக்சர் பட்டேல் வீசிய பந்தை அடிக்க முற்பட்டபோது, ரிஷப் பந்த் வேகமாக அவரை ஸ்டெம்பிங் செய்து அசத்தினார்.

இந்த ஸ்டெம்பிங்கை பார்த்த வர்ணனையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை, இந்திய அணியின் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான தோனி போன்று அவரது சிஷ்யர் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது.