விளையாட்டு

இப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்

rajakannan

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசர் அலி தனது கவனக்குறைவால் ரன் அவுட் ஆகினார். 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 145 ரன் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, மூன்றாவது நாளான இன்று பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. 

52.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்ச்சாளர் சிடில் வீசிய பந்தை பாகிஸ்தான் வீரர் அசார் பவுண்டரியை நோக்கி ஆப் சைடு ஸ்கெயர் திசையில் அடித்தார்.

பந்து பவுண்டரியை நோக்கி வேகமாக சென்றது. உடனே அசாரும், சக வீரர் ஷபிக்கும் ஆடுகளத்தின் நடுவே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைக் கோட்டில் இருந்து வந்த பந்தினை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிடித்து ஸ்டம்பில் அடித்தார். ரன் அவுட் என கத்திக் கொண்டே ஓடி வந்தார். 

அசாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்புறம் ரிப்ளேவில் பார்த்த போதுதான், வேகமாக சென்ற பந்து எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் நின்றுவிட்டது. தூரத்தில் இருந்து பார்த்தால் நிச்சயம் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், தனது கவனக் குறைவால் அசார் 64 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

90 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்து விளையாடி வருகிறது.  பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை விட 432 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.