விளையாட்டு

‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது

‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது

rajakannan

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனி அசத்தலாக ஒரு ரன் அவுட் செய்தார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் செய்வதற்கு இது மிகவும் குறைவான ரன்கள் தான். இருப்பினும் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்ததால் இங்கிலாந்தை சுருட்டி விடும் என்று நம்பினார்கள். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அடித்து விளையாடினர். 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அதன் பின்னரும், ஜேம்ஸ் வின்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது சாஹல் வீசிய 9வது ஓவரில் தோனி மேஜிக்கலான ஒரு ரன் அவுட் செய்தார். அந்த ஓவரின் கடைசி பந்தினை ஜோ ரூட் எதிர்கொண்டார். அப்போது இங்கிலாந்து அணி 9 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்திருந்தது. ரூட் அடித்த பந்து பாண்ட்யாவிடம் செல்ல அவர் மின்னல் வேகத்தில் பந்தினை தோனியிடம் வீசினார். இருப்பினும் பாண்ட்யா வீசிய பந்து ஸ்டம்பிற்கு சற்று தள்ளி வர, அதனை எட்டிப்பிடித்து தோனி அற்புதமாக ரன் அவுட் செய்தார். அப்போது அழகாக ஒரு டைவ் செய்தார்.

யாருமே இது ரன் அவுட் என்று நினைக்கவில்லை. அந்த அளவிற்கு நெருக்கமானது. மூன்றாவது நடுவரின் முடிவுக்கு சென்றது. அப்போது ரீப்ளே செய்து பார்த்ததில் அது அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. பேட்டிற்கும் கிரீஸிற்கு சில மில்லிமீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது.

ஸ்டம்பிங், ரன் அவுட் செய்வதில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை தோனி மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். தொடக்க வீரர்கள் இருவரையும் இங்கிலாந்து அணி அப்போது இழந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தால் வெற்றி நம் வசம் இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பை நமது பந்துவீச்சாளர்கள் தவறவிட்டு விட்டனர். 44.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில், இங்கிலாந்து அணி 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.