விளையாட்டு

"தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்" கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் வாசிம் ஜாஃபர் !

"தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்" கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் வாசிம் ஜாஃபர் !

jagadeesh

தாய் நாட்டுக்காக நான் விளையாட வேண்டும் என்று எண்ணிய தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ அப்படிதான் உள்ளூர் போட்டிகளில் வாசிம் ஜாஃபர். 1996-1997 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஜாஃபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 200 8ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். ரஞ்சி டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை வாசிம் ஜாஃபருக்கே உண்டு.

வாசிம் ஜாஃபர் 260 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 19,410 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 57 சதங்களும், 91 அரை சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ரன் 314. ஓய்வு குறித்து ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் " எனது பள்ளி நாட்களில் இருந்து கிரிக்கெட் வரை, எனது திறமைகளை மேம்படுத்த உதவிய எனது பயிற்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை காட்டிய தேர்வாளர்கள், நான் விளையாடியபோது இருந்த அனைத்து கேப்டன்களுக்கும், சக வீரர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்

அந்த அறிக்கையில் தன்னுடைய தந்தை குறித்து கூறியுள்ள ஜாஃபர் "இந்தியாவுக்காக விளையாடி என் தந்தையின் கனவை நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டுகள் கழித்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த சிவப்பு பந்து வடிவத்தைப் போலவே முதல் இன்னிங்ஸ் மட்டுமே முடிந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அது பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் இருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டோடு எப்போதும் இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.