விளையாட்டு

'ஓய்வுக்குப் பின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்' - மனம்திறந்த வாசிம் அக்ரம்!

JustinDurai

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், கடந்த 2003ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இந்நிலையில் Sultan: A Memoir என்ற பெயரில் வாசிம் அக்ரமின் சுயசரிதை நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது.அந்த சுயசரிதையில் வாசிக் அக்ரம் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் தற்போது கசிந்துள்ளன.

அதில் அவர் “எனது ஓய்வு காலத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல என் வாழ்வில் போதைப்பொருள் பழக்கம் நுழைந்தது. இங்கிலாந்தில் ஒரு பார்ட்டிக்கு சென்றபோது கோகைனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். பிறகு நாளுக்குநாள் அது பயன்படுத்துவது வளர்ந்து கொண்டே போனது. அந்த சமயத்தில் எனது மனைவி தனியாக இருக்கிறார் என்பதை நான் உணரவில்லை. அடிக்கடி என்னிடம் நான் கராச்சிக்கு செல்கிறேன்; எனது பெற்றோரிடம் வாழ விரும்புகிறேன் என்று கூறுவார். நான் தான் வற்புறுத்தி இருக்க வைத்தேன். அப்போது எனக்கு புரியவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படி போதையுடன் நான் செல்வதை கண்டு அவர் எப்படி மனமுடைந்திருப்பார் என்று பின்னர்தான் உணர்ந்தேன்.

2009ஆம் ஆண்டு எனது மனைவி என்னை விட்டு பிரிந்த போதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். அதன் பிறகு இந்த போதை பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளிவந்து விட்டேன். தற்போது வரை நான் அந்தப் பக்கம் செல்லவில்லை. இனியும் செல்ல மாட்டேன். என் வாழ்வில் மறக்க முடியாத இழப்பு எனது மனைவி என்னை விட்டு பிரிந்ததுதான். நான் அதிலிருந்து முழுமையாக வெளிவந்து விட்டேன் என்ற காரணத்திற்காகத்தான் எனது இருண்ட பக்கங்களை வெளியில் கூறுகிறேன். இது பலருக்கு உதாரணமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்” என வாசிம் அக்ரம் அதில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' - சோயப் அக்தர் காட்டம்