விளையாட்டு

குணமடையாத காயம்: ஐபிஎல் போட்டிகளில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

jagadeesh

விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இதன் காரணமாக அமீரகத்தில் தொடர இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அண்மை காலங்களில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்திய டி20 அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்ட வாஷிங்டன் சுந்தர் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த அவர் இப்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அடுத்தமாதம் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடர உள்ளன. இதில் காயத்தில் இருந்து குணமடைந்து வாஷிங்டன் சுந்தர் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆர்சிபி அணியில் ஆகாஷ் தீப் சேர்கப்பட்டுள்ளார்.