உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வார்னரும் ஆரோன் பின்சும் அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச் 53 ரன்களில் சவும்யா சர்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கவாஜா வந்தார். அவரும் வார்னரும் சிறப்பாக விளையாடினர். 55 பந்தில் அரை சதம் அடித்த வார்னர், 110 பந்தில் சதம் அடித்தார்.
இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதம். 139 பந்துகளில் 150 ரன் விளாசிய வார்னர், 166 ரன்னில் இருந்தபோது ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர்களும் 14 பவுண்டரிகளும் அடங்கும். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 313 ஆக இருந்தது.
அடுத்து சிறப்பாக ஆடிய கவாஜா 89 ரன்னிலும் மேக்ஸ்வென் 10 பந்துகளில் 32 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. ஸ்டோயினிஸ் 17 ரன்னுடனும் விக்கெட் கீப்பர் கேரி 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
பின்னர், 382 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 74 பந்துகளில் 62 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவருடன் களமிறங்கிய சவும்யா சர்கார் 10 ரன்னிலும் ஷகிப் அல் ஹசன் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தன. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமும் மஹ்மத்துல்லாவும் அதிரடியாக விளையாடினர். மஹ்மத்துல்லா 50 பந்துகளில் 69 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டிருந்தாலும் கடைசி வரை நிலைத்து நின்று போராடிய ரஹீம் சதம் அடித்தார்.
இது அவருக்கு 7-வது சதம். 50 ஓவர் முடிவில், அந்த அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ரஹீம் 102 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், கோல்டர் நைல், ஸ்டோயினிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 166 ரன்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.