விளையாட்டு

45-வது பிறந்தநாளை கொண்டாடும் லட்சுமண் .. நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா..?

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் இன்று தனது 45-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வெங்கட் சாய் லட்சுமண். 2000-ம் ஆண்டுவாக்கில் இந்திய பேட்டிங்கின் 'Fabulous Four'என்று அழைக்கப்படும் 4 வீரர்களில் இவரும் ஒருவர். அதாவது இந்திய கிரிக்கெட் அணியின்  'Fab Four'  என்ற அழைக்கப்பட்டவர்கள் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆவர். கிரிக்கெட் வீரர்கள் பலரின் அதிகப்பட்ச ஸ்கோர்களை நாம் ஞாபகம் வைத்து கொள்வதில்லை. ஆனால் விவிஎஸ் லட்சுமண் என்ற உடன் நமக்கு அவரின் அதிகப்பட்ச டெஸ்ட் ஸ்கோரான 281 என்பது தான் ஞாபகத்திற்கு வரும்.

ஏனென்றால் இவர் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் இந்த ஸ்கோரை அடித்திருந்தார். அந்த டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் கிடைத்த போது இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோல லட்சுமண் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அவரது சிறப்பான டிரைவ் ஷாட்கள் தான். குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் சவாலாக இருந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

இவர் மொத்தமாக அடித்துள்ள 17 டெஸ்ட் சதங்களில் 6 ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பதிவாகியுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் 2434 டெஸ்ட் ரன்களை அடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் லட்சுமண் அடித்த 73 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. 

அந்தப் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் இவர் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் கடைசி இரண்டு வீரர்களுடன் சிறப்பாக ஜோடி சேர்ந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இவர் 134 டெஸ்ட் போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அத்துடன் 8781 டெஸ்ட் ரன்களும் 2338 ஒருநாள் போட்டி ரன்களும் அடித்துள்ளார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்விற்கு பிறகு இவர் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவருடைய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு ஆசை தான் கடைசி வரை நிறைவேறவில்லை. அதாவது அவர் இந்திய அணிக்காக ஒரு முறை கூட ஒருநாள் உலகக் கோப்பையில் களமிறங்கவே இல்லை என்பது தான் அது. கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காத சில வீரர்களுள் இவரும் ஒருவர். 

இவருடைய அசாத்திய கிரிக்கெட் ஸ்டைலால் இவருக்கு கிரிக்கெட் உலகில் ‘Very Very Special’ Laxman என்ற பட்ட பெயரும் உண்டு. விவிஎஸ் லட்சுமண் இன்று தனது 45ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.