விளையாட்டு

“நடராஜன் கிட்ட இருக்கும் ஸ்பெஷலே வேற; அதனை ஐபிஎல்லில் காட்டவேயில்லை” - லக்ஷ்மண்!

EllusamyKarthik

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாட உள்ள தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ‘யார்க்கர்’ நடராஜனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மண் பாராட்டியுள்ளார். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் தனது பந்து வீச்சின் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்தார். குறிப்பாக கடைசி கட்டத்தில் அவர் வீசும் ஓவரின் 6 பந்துகளுமே துல்லியமான யார்க்கராக இருக்கும். ஒரு பந்துகூட தப்பாது.

“எல்லோருக்கும் நடராஜனை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டாக தான் தெரியும். ஆனால் அவர் பந்து வீச்சில் வேரியேஷன் காட்டக் கூடிய வல்லமை கொண்டவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும். ஷார்ப் பவுன்சர், ஆஃப் கட்டர், ஸ்லோயர் பால் என அவர் வெரைட்டியாக வீசுபவர். ஏனோ ஐபிஎல் தொடரில் அதை செய்ய தவறிவிட்டார். குறிப்பாக நியூ பாலில் விக்கெட் வீழ்த்தும் திறனும் படைத்தவர். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறனும் நடராஜனிடம் உள்ளது. அதற்கு ஆர்.சி.பி அணியுடனான ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை அவர் வீழ்த்தியதே சான்று” என தெரிவித்துள்ளார் லக்ஷ்மண். 

தமிழக பந்துவீச்சாளரான நடராஜன் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியதே இல்லை. ஆஸ்திரேலிய தொடர்தான் அவருக்கு முதல் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.