ரிஷப் பன்ட் கேப்டன்சிக்கு 10க்கு 3 மார்க் மட்டுமே தன்னால் கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அணி நேற்றையப் போட்டியில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியடைந்து வெற்றி வாய்ப்பை இழந்தது.
இது குறித்து வீரேந்திர சேவாக் "ரிஷப் பன்ட் கேப்டன்சிக்கு என்னால் 10-ல் 5 மார்க் கூட கொடுக்க முடியாது, நிறைய தவறுகளை இழைத்துள்ளார். ஒரு கேப்டன் என்பவர் போட்டியை மாற்றக் கூடிய அளவிலான முடிவுகளை எடுத்து அதனை செயல்படுத்த வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பவுலிங்கையும், பீல்டிங்கையும் மாற்றியமைக்க வேண்டும். அதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ரிஷப் பன்ட் நல்ல கேப்டனாக மாற ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும்" என்றார்.
மேலும் "முதலில் ஸ்மார்ட்டான கிரிக்கெட் வீரராக இருந்துவிட்டு பின்பு நல்ல கேப்டனாக மாறலாம். இப்போது என்னால் ரிஷப் பன்ட் கேப்டன்சி திறமைக்கு 10க்கு 3 மார்க்குகள் மட்டுமே என்னால் கொடுக்க முடியும்" என்றார் வீரேந்தர் சேவாக்.