வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சப்பாத்தியில் கையுறை போன்ற படம் வைரலாக பரவி வருகிறது.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போது ஏதாவது நகைச்சுவையாக பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். அப்படி இன்றைக்கு அவர் சப்பாத்தியில் ஒரு கையுறையை பகிர்ந்ததுள்ளார். என்னது? சப்பாத்தியில் கையுறையா என ஆச்சர்யமாக உள்ளதா?.
திருமணமான புதிதில் கணவன்மார்கள் மனைவி கையால் உண்பதற்கு விரும்புவார்கள். அப்படி ஆசைப்படும் கணவன்கள் மனைவியிடம் கேட்டால் என்ன ஆகும்? இதனை தனது சுவாரஸ்யமான ட்வீட் மூலம் பகிர்ந்திருக்கிறார் சேவாக். உனது கையால் சப்பாத்தி சாப்பிட வேண்டுமென கணவன் கேட்க, தனது கை வடிவிலான சப்பாத்தி செய்து அசத்திய மனைவி என பகிர்ந்து அப்லாஸ் அள்ளியிருக்கிறார் சேவாக்.
அதோடு நிற்காமல், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை இணைத்து மற்றொரு ட்வீட்டையும் தட்டி விட்டிருக்கிறார் சேவாக். அதில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு இந்தச் சப்பாத்தி கையுறைகளை அனுப்பவா என அவரை வம்பிழுத்திருக்கிறார் சேவாக்.
சேவாக்கின் இந்தச் சேட்டைகளை ரசித்த அவரது பாலோயர்கள், அனுஷ்கா - விராத்கோலி திருமண படத்தை பகிர்ந்து கோலியின் நிலை இதுதானோ என கிண்டல் செய்துள்ளனர். இன்னும் சிலர், சேவாக்குக்கு திருமணமான முதல்நாள் அவருக்கு இந்தச் சப்பாத்திதான் கொடுக்கப்பட்டது போல எனவும் அவரை நக்கலடித்துள்ளனர்.