ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றாக, ’உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்’ எனக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி டெல்லி அணிக்காக சமீபத்தில் களம் கண்டார். அவரது ஆட்டத்தைக் காணும் வகையில், ஏராளமான ரசிகர்கள் மைதானங்களில் குவிந்தனர்.
இதில், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரயில்வே அணியின் பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வானின் அபார பந்துவீச்சில் விராட் கோலி போல்டானார். இந்த நிலையில், விராட் கோலியின் விக்கெட் எடுத்தது குறித்து ஹிமான்சு சங்வான் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”எங்கள் ரயில்வே அணியில் நான்தான் முதன்மைப் பந்துவீச்சாளர். அதனால் நான் கண்டிப்பாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என எங்கள் அணியில் ஒவ்வொரு வீரரும் நம்பிக்கை கொடுத்தார்கள். நாங்கள் செல்லும் பேருந்து ஓட்டுநர்கூட, ’விராட் கோலிக்கு நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டெம்ப் லைனில் பந்து வீசுங்கள்; அவர் நிச்சயம் ஆட்டம் இழந்துவிடுவார்’ எனக் கூறினார்.
ஆனால், நான் அவரது பலவீனத்தில் கவனம் செலுத்தவில்லை. என்னுடைய பலத்தைத்தான் நான் நம்பினேன். அதேபோல் என்னுடைய பலத்திற்கு தகுந்தாற்போல் நான் பந்து வீசி விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினேன். உண்மையில் விராட் கோலிக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் தீட்டவில்லை.
இன்னிங்ஸ் முடிந்தவுடன் நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றோம். அப்போது விராட் கோலி அங்கு நின்றுகொண்டிருந்தார். உடனே என்னைப் பார்த்து விராட் கோலி, ’நன்றாகப் பந்துவீசினீர்கள்’ என கைகொடுத்தார். அதன்பின்னர், நான் விக்கெட் எடுத்த பந்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது, ’இது என்னை அவுட் ஆக்கிய பந்துதானே’ என நகைச்சுவையாகக் கேட்டுச் சிரித்தார்.
இந்தப் போட்டி முடிந்ததும் என் வாழ்க்கையே மாறியதாக நினைத்தேன். எனது மொபைலுக்கு நிறைய போன் கால்கள் வந்திருந்தன. இன்ஸ்டாவிலும் வெறும் 700 பேர் மட்டுமே என்னைப் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது அது 18 ஆயிரமாக மாறி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உத்தரபிரதேச அணிக்கு எதிராக ரயில்வேஸ் அணிக்காக முதல் தர போட்டியில் அறிமுகமான 29 வயதான சங்வான், தற்போது விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளார். டெல்லி அணியில் ரிஷப் பண்ட்டும் இடம்பெற்றுள்ளார். சங்வானும் பண்ட்டும் டெல்லி U-19 அணிக்காக முன்பு ஒன்றாக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.