விளையாட்டு

“விராட் கோலியின் கேப்டன்ஷிப்பும் தோல்விக்கு காரணம்” - நாஸர் ஹுசைன்

“விராட் கோலியின் கேப்டன்ஷிப்பும் தோல்விக்கு காரணம்” - நாஸர் ஹுசைன்

rajakannan

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியில் விராட் கோலியின் கேப்டன்ஷிப்புக்கும் பங்கு உண்டு என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹுசைன் கூறியுள்ளார்.

விராட் கோலி முதல் இன்னிங்சில் 149, 2வது இன்னிங்சில் 51 ரன்கள் என மொத்தம் 200 ரன்கள் குவித்தார். ஆனால், மற்ற வீரர்கள் 30 ரன்கள் எட்டவே மிகவும் சிரமப்பட்டனர். முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரகானே, தினேஷ் கார்த்திக் என ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் சொதப்பினார்கள். இதனால், 194 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து நாஸர் ஹுசைன் கூறுகையில், “இந்தப் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. வெற்றியின் பக்கம் இருக்க அவர் தகுதியுடையவர். விராட் தனி ஆளாக இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் கொண்டு சென்றிருக்கிறார். இருப்பினும், இந்திய அணியின் தோல்விக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.

இரண்டாவது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் கர்ரன் மற்றும் அடில் ரஷித் இருந்தனர். அந்த நேரத்தில் ஏதோ காரணத்திற்காக அஸ்வின் ஒரு மணி நேரம் போட்டியில் இருந்து வெளியே இருந்தார். அப்போது இந்திய அணி தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அவர் தனது கேப்டன்ஷிப்பில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். ஸ்பின்னர்களிடம் குறைவான ரன்ரேட் வைத்துள்ள 20 வயது இடக்கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது, ஏன் அஸ்வினை வெளியேற அனுமதிக்க வேண்டும்?.

இந்தப் போட்டியில் மைதானத்தின் தன்மையும் முக்கியமானது. இது பிளாட் பெல்ட்டர் மைதானம் அல்ல. தரம்வாய்ந்த பந்துவீச்சும், கேப்டன்ஷிப்பும் தான் முக்கிய பங்களிப்பு செலுத்தும். அந்த வகையில் ரூட் சிறப்பான பங்களிப்பை செலுத்தினார்” என்றார்.