விளையாட்டு

"14 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்" - ரன் மெஷினாக உருவெடுத்த கோலியின் பயணம் ஆரம்பித்த நாள்!

"14 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்" - ரன் மெஷினாக உருவெடுத்த கோலியின் பயணம் ஆரம்பித்த நாள்!

சங்கீதா

14 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானதை கொண்டாடும்விதமாக வீடியோ வெளியிட்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அசைக்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் கேப்டனான விராட் கோலி என்பதை மறுக்கமுடியாது. அதிவேகத்தில் ரன்களை குவித்து வந்ததால், ரசிகர்களால் ரன் மெஷின் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவர். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு சதம் அடிக்க தடுமாறி வருவதும், குறிப்பிட்ட ஒருசில வீரர்களை தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் இணைந்து அணியில் சேர்ப்பதை தவிர்ப்பதாகவும் கடும் விமர்சனங்களை சந்தித்துவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்துடன் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் முழுவதுமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

கேப்டன் பொறுப்பு அழுத்தத்தால் ஃபார்ம் இல்லாமல் விராட் கோலி தடுமாறுவதாக கூறப்பட்டு வந்தாலும், அதன்பிறகும் ரன்கள் எடுக்க விராட் கோலி சிரமப்பட்டு வருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில், சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முதலில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணி சார்பில் விளையாடி வந்த விராட் கோலி, பின்னர் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், கேப்டனாக பொறுப்பேற்று, கோப்பையை வென்றுக் கொடுத்தவர் தான் விராட் கோலி. அந்தப் போட்டி முடிவடைந்த ஒருசில மாதங்களிலேயே இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் 19 வயதிலேயே இடம் பிடித்தார் விராட் கோலி. அப்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக் ஆகிய இருவரும் தான் துவக்கவீரர்களாக களமிறங்குவர். ஆனால் காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கருக்கு பதிலாக விராட் கோலி இதே ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி. இலங்கையின் டம்புல்லா மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் 22 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார் விராட் கோலி.

அறிமுகப் போட்டி சிறப்பாக அமையவில்லை என்றாலும், அதன்பிறகு இந்த 14 வருடங்களில் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் விராட் கோலி சாதித்தது எண்ணிலடங்காதவை. இந்த 14 வருடங்களில் மொத்தம் 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,344 ரன்களை கடந்துள்ளார். இதில் அதிவேகத்தில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் பெற்றவர். இதேபோல், 102 டெஸ்ட் போட்டிகளில் 8,074 ரன்களும், 99 டி20 போட்டிகளில் விளையாடி 3,308 ரன்களையும் கடந்துள்ளார் விராட் கோலி.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடியபோது, 4-வது ஒருநாள் போட்டியில் 114 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தை துவங்கிய விராட்கோலி, இதுவரை 70 சதங்களை அடித்துள்ளார். இதில் டெஸ்ட போட்டியில் 27 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களையும் அடித்துள்ளார் விராட் கோலி. டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்னாக 254 ரன்களும், ஒருநாள் போட்டியில் 183 ரன்களும் எடுத்துள்ளார் விராட் கோலி.

மேலும் 92 அரை சதங்களையும் அடித்திருக்கிறார் விராட் கோலி. கடந்த 2017-ம் ஆண்டு முதல் மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி, தனிப்பட்ட பேட்டிங்கில் மட்டுமல்லாது, கேப்டன் ஆகவும் எண்ணற்ற சாதனைகளையும் படைத்திருக்கிறார். நம்பர் ஒன் வீரராக மட்டுமின்றி இந்திய அணியையும் நம்பர் ஒன் இடத்தில் கொண்டு வந்த பெருமை நிச்சயம் விராட் கோலியையே சாரும்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, எனினும் சில நாட்களுக்குப் பிறகு திடீரென அனைத்துவித போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது ரன் எடுக்க தடுமாறி வரும் விராட் கோலி, இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஆசியக் கோப்பையில் 71-வது சதத்தை அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, “14 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பயணம் துவங்கியது. இதனை நான் பெருமிதமாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.