விளையாட்டு

கேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்!

கேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்‌டன் விராட் கோலி தனது 30ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் சாதனைகளை திரும்பிப் பார்க்கலாம்.

  • தலைநகர் டெல்லியில் 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிறந்த விராட் கோலி, 3 வயதிலேயே கிரிக்கெட் மட்டையை தூக்கினார். 
  • 15 வயதிற்கு உட்பட்டோருக்கான முதல் தர போட்டியில் டெல்லி அணி சார்பாக களம் கண்டார் கோலி. 
  • அதிரடி, ஆக்ரோஷம், நேர்த்தி என தனது பேட்டிங் திறமையை நாளுக்கு நாள் மேருகேற்றிக் கொண்டார் விராட். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 2008ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமையேற்று, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.
  • இளையோர் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கோலி, இந்திய சீனியர் அணிக்காக 2008 ஆகஸ்ட்டில் இலங்கை உடனான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 
  • அதன் பிறகு 2010ல் டி-20 போட்டியிலும், 2011ல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் களம் கண்டார் கோலி.
  • பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் அடுக்கினார் விராட். 
  • ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 38 சதங்களை விளாசியவர், சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக 18 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைகளை வசப்படுத்தினார்.
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர் , இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில், 6 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் விராட் கோலி. அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சராசரியாக 49 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி.
  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் குறைவான ஆட்டங்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் கோலியையே சாரும். 
  • தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோலி, 2017ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றுள்ளார்
  • 2014ஆம் ஆண்டு இறுதியில் இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகியபோது, அந்தப் பொறுப்பை கோலி ஏற்றார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியது. இந்திய அணியை டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றினார்.