இலங்கைக்கு எதிரான தொடரை டக் அவுட் உடன் தொடங்கிய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருதினை பெற்றுள்ளார்.
இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த நவம்பர் 11-ம் தேதி தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி டக் அவுட் ஆனார். இரண்டாது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 104 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராட் கோலி 213 ரன்கள் குவித்தார். டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியும் டிராவில் முடிந்தது. கோலி முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 50 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியில் 243 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், தொடரில் 5 இன்னிங்சில் மட்டும் விளையாடி 610 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் சதம் அடித்தார். பேட்டிங் சராசரி 152 ஆகும். இந்த ஆண்டில் மட்டும் 46 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 2818 ரன்கள் குவித்துள்ளார்.