விளையாட்டு

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி! புதிதாக படைக்கப்பட்ட ரெக்கார்டுகள்!

சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி! புதிதாக படைக்கப்பட்ட ரெக்கார்டுகள்!

Rishan Vengai

இந்தியா வங்கதேச அணிகளுக்கிடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து உள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இன்றைய ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் விராட் கோலி, 91 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 113 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில் தனது 44ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் சர்வதேச சதத்தில் 73 சதங்களை குவித்து சச்சினிற்கு பிறகு அதிக சதங்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சேர்த்துள்ளார்.

இந்தியா வங்கதேசத்திற்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தாலும், பின்னர் கைக்கோர்த்த விராட் மற்றும் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினர். முன்னதாக விராட் கோலி மிஸ்டைமிங்க் ஷாட்கள் விளையாடினாலும், இஷானிற்கு சிங்கிள் ரொட்டேட் கொடுக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிஷான் சர்வதேச போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். பின்னர் விராட் கோலியும் தனது டி20 உலகக்கோப்பையில் விட்ட பார்மை திரும்ப கொண்டு வர, 91 பந்துகளில் 113 ரன்கள் அடித்து தனது 44ஆவது சதத்தை பதிவு செய்தார். இஷான் மற்றும் விராட் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 409 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு விராட் கோலி பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் 3 அணிகளுக்கு எதிராக 1000+ ரன்கள்!

91 பந்துகளில் 113 ரன்கள் குவித்திருக்கும் விராட் கோலி வெளிநாட்டு ஆடுகளங்களில் ஒரு சர்வதேச அணிக்கு எதிராக 1000+ ரன்களை சேர்த்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்திருக்கும் விராட் கோலி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என 3 அணிகளுக்கு எதிராக இதை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்!

வங்கதேச அணிக்கு எதிராக தன்னுடைய 4ஆவது சதத்தை பதிவு செய்திருக்கும் விராட் கோலி, 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 807 ரன்களை குவித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் 15 போட்டிகளில் 738 ரன்கள் குவித்திருந்த ரோகித் சர்மாவின் சாதனையை பின்னுக்கு தள்ளி விராட் இதை செய்துள்ளார்.

3 வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள்!

டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் என மூன்றுவிதமான போட்டிகளிலும் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

வங்கதேச அணிக்கு எதிராக 1317 ரன்களை குவித்திருக்கும் விராட், 1316 ரன்களை குவித்து அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்த லிட்டில் மாஸ்டர் சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த இடத்தில் 1225 ரன்களுடன் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருக்கிறார்.

தற்போது நடைபெற்றிருக்கும் போட்டிக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக 25 போட்டிகளில் 73.26 சராசரியுடன் 1392 ரன்கள் குவித்துள்ளர் விராட் கோலி.

அதிவேகமாக 44 சதங்கள் விளாசிய முதல் வீரர்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 44 சதங்களை அடித்திருக்கும் விராட் கோலி அதிவேகமாக அத்தனை சதங்களை விளாசி புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறார்.

418 இன்னிங்ஸ்களில் 44 ஒருநாள் சதங்களை சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்க, 256 இன்னிங்ஸ்களிலேயே 44 சதங்களை விளாசி புதிய சாதனையை படைத்திருக்கிறார் விராட்.

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை குவித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 6 சதங்களே விராட்கோலிக்கு மீதம் உள்ளது.

அதிக ரன்ரேட்டில் அடிக்கப்பட்ட 250+ பார்ட்னர்ஷிப்!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டாவது விக்கெட்டிற்கு 290 ரன்களை குவித்தனர் விராட் கோலி மற்றும் இஷான் இருவரும். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு 8.98 ரன்ரேட் வீதத்தில் 286 ரன்கள் குவித்த இலங்கையின் சனத் ஜெயசூர்யா மற்றும் தரங்கா இருவரும் படைத்த சாதனையை முறியடித்து, 9.15 ரன்ரேட் வீதத்தில் 290 ரன்களை குவித்துள்ளனர் விராட் மற்றும் கிஷான் கூட்டணி.

எதிரணியின் சொந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிக பார்ட்னர்ஷிப்!

ஒருநாள் போட்டிகளில் எதிரணியின் ஹோம் கிரவுண்டில் இந்திய அணியின் சார்பாக அடிக்கப்பட்ட அதிக பார்ட்னர்ஷிப் ரன்களை குவித்துள்ளனர் விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் இருவரும். 290 ரன்களை குவித்த இந்த ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது.

அந்த வரிசையில் 190 விராட் & இஷான் (வங்கதேசம்), 252 சச்சின் & கங்குலி (இலங்கை), 223 அசாருதின் & ஜடேஜா (இலங்கை), 221 சேவாக் & யுவராஜ் (இலங்கை), 219 கோலி & ரோகித் (இலங்கை) இந்திய அணி வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் 71 சதங்களை பின்னுக்குதள்ளி 72ஆவது சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, சச்சினின் 100 சதங்களுக்கு பிறகு அதிக சர்வதேச சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.