விளையாட்டு

“ஹாட்ரிக் சாதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” - கோலி கேள்விக்கு பும்ரா பதில்

“ஹாட்ரிக் சாதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” - கோலி கேள்விக்கு பும்ரா பதில்

webteam

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவர் டேரன் பிராவோ, புரூக்ஸ், சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்நிலையில் இந்த ஹாட்ரிக் சாதனை குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியும் பும்ராவும் உரையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், முதலில் ஹாட்ரிக் சாதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று விராட் கோலி பும்ராவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு பும்ரா, “எனக்கு ஹாட்ரிக் நிகழ்த்தியது முதலில் தெரியவே இல்லை. ஏனென்றால் மூன்றாவது விக்கெட்டின் போது பந்து பேட்டில் பட்டது போல நான் நினைத்தேன்.

ஆகவே நான் சரியாக விக்கெட்டிற்கு முறையிடவில்லை. எனினும் சரியான நேரத்தில் ரிவியூவ் கேட்டதால் விக்கெட் கிடைத்து விட்டது. எனவே இந்த ஹாட்ரிக் சாதனையை நான் இந்திய கேப்டனுக்குதான் அர்ப்பணிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின் போது 9ஆவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது முதலில் டேரன் பிராவோ, இரண்டாவதாக புரூக்ஸ் ஆகியோரை பும்ரா ஆட்டமிழக்க செய்தார். இதனையடுத்து சேஸ் களமிறங்கினார். இவர் பும்ரா வீசிய அடுத்த பந்தை எதிர்கொண்டார். இந்தப் பந்து அவரின் கால் பேடில் பட்டது. உடனே இந்திய வீரர்கள் எல்பிடபிள்யுவிற்கு முறையிட்டனர். இதற்கு நடுவர் மறுத்தார். 

இதனையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி ரிவியூவ் கேட்டார். ரீ-ப்ளேவில் பந்து பேட்டில் படவில்லை எனத் தெரியவந்தது. அத்துடன் பேட்ஸ்மேன் அவுட் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடுவர், அவரது முடிவை மாற்றி விக்கெட் கொடுத்தார். இதன்மூலம் பும்ரா தொடர்ந்து மூன்று பந்துகளில் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை படைத்தார். இந்தச் சாதனையின் மூன்றாவது விக்கெட் வர இந்திய கேப்டன் விராட் கோலி முக்கிய பங்கு ஆற்றியது குறிப்பிடத்தக்கது.