விளையாட்டு

உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் : இடம்பிடித்த ஒரே இந்திய வீரர் கோலி

webteam

உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி 100வது இடத்தை பிடித்தார். அப்போது அவர் ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 34 இடங்கள் முன்னேறிய விராட் கோலி 66வது இடத்திற்கு வந்துள்ளார். அவர் ஆண்டு தோறும் 26 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மில்லியன் டாலர் மட்டுமே சம்பளம் மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவது மூலமாகக் கோலி பெறுகிறார். மீதமுள்ள 24 மில்லியன் டாலரை விளம்பரம், ஒப்பந்தம், விளம்பர தூதர், ஐபிஎல் உள்ளிட்டவற்றின் மூலம் அவர் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், பிரபல டென்னிஸ் வீரர் ரோஜெர் ஃபெடெரெர் முதலிடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருவாய் 106.3 மில்லியன் எனக் கூறப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து பிரபல கால்பந்து வீரர்களான கிரிஸ்டியனோ ரொனால்டோ (105 மில்லியன் டாலர்), லியோனெல் மெஸ்ஸி (104 மில்லியன் டாலர்), நெய்மர் (95.5 மில்லியன் டாலர்) என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.