விளையாட்டு

சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி ! பாட்டிக்கு டிக்கெட் கொடுத்து அசத்தல்

சொன்ன சொல்லை காப்பாற்றிய கோலி ! பாட்டிக்கு டிக்கெட் கொடுத்து அசத்தல்

webteam

மூதாட்டி சாருலதாவுக்கு விராட் கோலி கொடுத்த உறுதியின்படி இந்தியா விளையாடவுள்ள மற்ற போட்டிகளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அன்றைய போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மூதாட்டி சாருலதா.

87 வயதான மூதாட்டி சாருலதா இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினார். 

இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது, “நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன்’’எனத் தெரிவித்தார். இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மூதாட்டி சாருலதாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.

அப்போது, விராட், ரோகித்துக்கு மூதாட்டி ஆசையாக முத்தங்களை கொடுத்தார். மூதாட்டி சாருலதாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய படங்களை விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் இந்திய அணி விளையாடவுள்ள மற்ற போட்டிகளுக்கும் தானே டிக்கெட் எடுத்து தருவதாகவும் கோலி உறுதியளித்தார்.

இந்நிலையில் இந்தியா விளையாடவுள்ள மற்ற போட்டிகளுக்கு தங்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டதாக  சாருலதா பாட்டியின் பேத்தி அஞ்சலி தெரிவித்துள்ளார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கும் டிக்கெட் கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கூடுதலாக இன்னும் சில டிக்கெட்டுகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தாகவும் ஆனால் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.