விளையாட்டு

கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'

கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. பட்லர் 89, குக் 71, முகமது அலி 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அறிமுக வீரர் விஹாரி 56 ரன்களும், கேப்டன் விராத் கோலி 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், மொய்தீன் அலி தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து, 40 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

நான்காவது நாளான நேற்று குக், ரூட் இருவரும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். குக் நிதானமாக விளையாட, ரூட் ஒருநாள் போட்டியை போல் அடித்து விளையாடினார்.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் 210 பந்துகளிலும், ரூட் 151 பந்துகளிலும் சதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 321 ரன்கள் எடுத்திருந்த போது ரூட் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் குக் 147 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தனர். இந்த இரண்டு விக்கெட்களையும் அறிமுக வீரர் விஹாரி கைப்பற்றினார். 

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட்கள் சரிந்தது. ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கர்ரன் 30 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 112.3 ஓவரில் 423 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, விஹாரி தலா 3 விக்கெட் சாய்த்தனர். இதனையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்தது. தவான் ஒரு ரன்னிலும், புஜாரா, விராத் கோலி டக் அவுட் ஆகியும் வந்த வேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். கே.எல்.ராகுலும் ரஹானேவும் ஆடி வருகின்றனர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதல் இரண்டு ரிவியூ-களையும் விரைவாக இழந்தது. இதனால் சில வாய்ப்புகளில் நடுவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இயலாமல் போனது. 2-வது இன்னிங்சில் ஜடேஜா பந்து வீசும்போது அடுத்தடுத்த ஓவரில் ஜென்னிங்ஸ் (9.2) மற்றும் அலஸ்டைர் குக்கிற்கு (11.6) நடுவர் விக்கெட் கொடுக்காததால் விராட் கோலி ரிவியூ கேட்டார். அப்போது இருவரின் பேடும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும்போது பந்து தாக்கியதால் ரிவியூ வாய்ப்பை இந்தியா இழந்தது.

இந்நிலையில் ரிவியூ கேட்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கடுமையான விமர்சனத்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது முன்வைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் "கோலி உலகிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால் ரிவ்யூ கேட்பதில் கோலிதான் மிகவும் வொர்ஸ்ட்" என குறிப்பிட்டுள்ளார்.