கடைசி சுற்றுப் பயணத்தில் பார்த்த விராட் கோலி தற்போது இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய அணி கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது, மகேந்திர சிங் தோனி தலையிலான இந்திய அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அந்தத் தொடரில் இப்போதைய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் தடுமாறினார். 5 டெஸ்ட் போட்டிகளிலும் முறையே 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20 என 134 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்தார். பேட்டிங் சராசரி வெறும் 13.50 மட்டுமே.
ஆனால், கடந்த 4 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி மளமளவென வளர்ந்து விட்டார். டெஸ்ட் போட்டிகளிலும் சதங்களை குவித்து வருகிறார். நிதானமாக விளையாடி ரன்களை குவிக்கிறார். தற்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடினார். 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட், இதுவரை 5554 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 21 சதம், 6 அரைசதம் 6, 16 அரைசதம் அடங்கும். சராசரி 53.4 ரன்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்து அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார். ‘அந்த நேரத்தில் விராட் கோலிக்கு அது முதல் சுற்றுப் பயணம்.. அதன் பிறகு அவர் நிறைய ரன்கள் எடுத்துவிட்டார். இந்தத் தொடரில் அவர் மிகவும் பிரமாதமாக விளையாடுவார். பல டெஸ்ட் போட்டியில் தன்னுடைய பேட்டிங்கால் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். கேப்டன் பதவி உள்ளதால் அவருக்கு நெருக்கடி இருப்பதாக நான் நினைக்கவில்லை’ என்றார் அசாருதீன்.