இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 352 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸில் ரஹானே 81, இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 72 ரன்கள் எடுத்து இந்திய அணி வலுவான நிலையை எட்ட உதவினர். முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களையும், 5 விக்கெட்களையும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்களை சாய்த்து வெற்றிக்கு உதவினார். இஷாந்த் சர்மா இரண்டு இன்னிங்ஸிலும் தலா இரண்டு விக்கெட்கள் சாய்த்தார்.
முதல் இன்னிங்ஸில் 97, இரண்டாவது இன்னிங்ஸில் 103 என மொத்தம் 200 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேசுகையில், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். நிச்சயம் இந்த தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்பொழுது 1-2 என கணக்கில் இருப்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் விளையாடுவோம். பேட்டிங், பந்துவீச்சு என எல்லா பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தான் நாங்கள் விளையாடி உள்ளோம்” என்றார்.