’விராத் கோலி மற்ற வீரர்களை மதிக்கத் தெரிந்தவர்’ என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர், மார்க்ரம் சொன்னார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 94 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ரம் கூறும்போது, ’அஸ்வின் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. எனது சொந்த மைதானத்தில் சதத்ததை தவறவிட்டது ஏமாற்றமாக இருந்தது. நான் அவுட் ஆனதும் இந்திய கேப்டன் விராத் கோலி, ’நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். ஆனால், துரதிர்ஷ்டமாக வெளியேறிவிட்டீர்கள்’ என்றார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. களத்தில் அவர் ஓர் ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்றுதான் தெரியும். ஆட்டத்தின் போது டிவியில் அப்படித்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் விராத் கோலி மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர் என்பதை வெளியே யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது பெரிய விஷயம்’’ என்றார்.