இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி தொடரை இழந்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் இந்திய அணி தொடர்ச்சியாக சொதப்பியது. இந்தத் தொடரை இழந்ததன் மூலம் தொடர்ச்சியாக 10 தொடர்களில் தோல்வியே பெறாத அணி என்ற சாதனையை தவறவிட்டுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை என்ற நிலை இந்தத் தொடரிலும் தொடர்கிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, “தோல்வியை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் பேட்டிங் செய்யும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. விளையாடு முறை எங்கள் கைகளை விட்டு போய்விட்டது. இது ஏற்புடையது அல்ல” என்றார்.
அப்போது, 11 பேர் கொண்ட அணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோலி டென்ஷன் ஆகிவிட்டார். அப்படி என்றால் எது பெஸ்ட் 11 அணி எது என்று நீங்களே கூறுங்கள் திருப்பி கேட்டுவிட்டார். பின்னர் அமைதியான கோலி, ஆட்டத்தின் முடிவை வைத்து அணியை தேர்வு செய்வதில்லை, வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான் தேர்வு செய்கிறோம் என்றார்.