2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், கனவு ஒரு நாள் அணியின் கேப்டன், கனவு டெஸ்ட் அணி கேப்டன் என ஐந்து விருது களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). அவர்களின் ஆட்டத்திறனை வைத்து இந்த தேர்வு நடைபெறும். அதன்படி, 2018 ஆம் ஆண்டுக்கான, சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக விராத் கோலியை அறிவித்துள்ளது ஐசிசி.
ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறை. 2018-ல், 14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 1202 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 133.55. இதில் ஆறு சதமும் அடங்கும். அதோடு அதிவேகமாக பத்தாயிரம் ரன்னை குவித்த வீரர் என்ற சாதனையையும் இந்த வருடம் படைத்துள்ளார்.
ஒரு நாள் போட்டியை அடுத்து, 2018 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் விராத்தை ஐசிசி அறிவித்துள்ளது. முதன்முறையாக இந்த கவுரவத்தை அவர் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில் அவர் 1322 டெஸ்ட் ரன்களை குவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து சதம் அடித்துள்ளார். அவரது சராசரி 55.08 ஆகும். இதையடுத் து ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் விராத் கோலி தேர்வு செய்யப்பட்டு ள்ளார். இதையடுத்து சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பையை அவர் பெறுகிறார்.
அதோடு, ஐசிசி கனவு ஒரு நாள் அணியின் கேப்டனாகவும் டெஸ்ட் அணி கேப்டனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரே வீரர் இத்தனை விருதுகளையும் ஒரே ஆண்டில் பெறுவது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
ஐசிசி டெஸ்ட் அணி:
டாம் லதாம் (நியூசிலாந்து.), கருணாரத்னே (இலங்கை), கனே வில்லியம்சன் (நியூசி.), விராத் கோலி (கேப்டன்), ஹென்றி நிகோலஸ்(நியூசி.), ரிஷாப் பன்ட்(இந்தியா), ஜேஸன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ரபாடா (தென்னாப்பிரிக்கா), நாதன் லியான் (ஆஸி), பும்ரா, முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்)
ஐசிசி ஒருநாள் அணி:
ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), விராத் கோலி (கேப்டன்_, ஜோ ரூட் (இங்கிலாந்து), ரோஸ் டெய்லர் (நியூசி), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (இங்கி), முஸ்தபிசுர் ரஹ்மான் (பங்களாதேஷ்), ரஷித் கான் (ஆப்கான்), குல்தீப் யாதவ், பும்ரா.