பெங்களூரு அணியுடனான நேற்றைய ஐபிஎல் டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியடைந்தது. இதனால் சோர்ந்துப்போன டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் ஹெட்மெயருக்கு ஆர்சிபி கேப்டன் கோலியும், வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜூம் ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று விளையாடின. அகமதாபாத் - நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டதில் பெங்களூரு அணி வெறும் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி.
டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் 32 பந்துகளில் 55 ரன்களுக்கு பன்ட் - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பன்ட் நிதானமாக விளையாடினார். அவர்களது பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 23 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஹெட்மயர். டெல்லி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார்.
முதல் பதில் சிங்கிள், அடுத்த பந்திலும் சிங்கிள் எடுத்தனர் பன்ட் மற்றும் ஹெட்மயர். அடுத்த பந்து டாட். நான்காவது பந்தில் இரண்டு ரன். ஐந்தாவது பந்தில் பவுண்டரி. கடைசி பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பண்ட் பவுண்டரி மட்டுமே அடித்தார். இதனால் டெல்லி அணி 1 ரன்னில் தோல்வியடைந்தது. ரிஷப் பன்ட் - ஹெட்மயர் கடுமையாக போராடியும் தோற்றதால் இருவரும் மிகுந்த சோகத்துடனும் சோர்வுடனும் இருந்தனர்.
இந்திய அணியின் செல்லப் பிள்ளை ரிஷப் பன்ட் சோர்வும் விரக்தியாகவும் இருந்ததை பார்த்த கோலியும், சிராஜூம் ஆறுதல் கூறியதுடன் உற்சாகப்படுத்தினார்கள். இதேபோல சிறப்பாக விளையாடிய ஹெட்மயருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் கோலி.