விளையாட்டு

சாதனைக்கு இன்று காத்திருக்கிறார் விராத் கோலி

சாதனைக்கு இன்று காத்திருக்கிறார் விராத் கோலி

webteam

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது ஒரு நாள் போட்டியில், விராத் கோலி சாதனை படைக்க இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.  கயானாவில் நடந்த முதலாவது போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

2006-ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்ததில்லை. அந்த சாதனை யை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்கும். அதே நேரம் டி-20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க வெஸ்ட் இண்டீஸ் அணி முயலும். அந்த அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்லுக்கு இன்றைய போட்டி 300 வது ஒரு நாள் போட்டி ஆகும்.

இந்தப் போட்டியில் கேப்டன் விராத் கோலி, சாதனை படைக்க இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராத் கோலி இதுவரை 1,912 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 19 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான் தத்தின் (1930 ரன்) 26 வருட சாதனையை முறியடிப்பார்.