நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தொடர்ந்து சோகம் நீடிக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான புனே டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டாகவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி, இரண்டாவது போட்டியில் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட 126 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்த போட்டியிலும் சோபிக்கத் தவறினார். கடந்த 2016ல் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 1,215 ரன்கள் குவித்து ஜொலித்தார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, நடப்பு தொடரில் தடுமாறி வருகிறார். பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹசல்வுட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த அவர், நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையின் உதவியை நாடினார். ஆனால், ஹாட் ஸ்பாட் எனப்படும் வெப்ப உணரி தொழில்நுட்பம் டிஆர்எஸ் முறையில் பயன்படுத்தாத காரணத்தால் மூன்றாவது நடுவரால் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. இதனால் களத்தில் உள்ள நடுவரின் தீர்ப்பையே மூன்றாவது நடுவரும் உறுதி செய்தார். கேப்டனாக கோலி பொறுப்பேற்ற பின்னர், டிஆர்எஸ் முறையில் இந்திய அணி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்த சோகம் பெங்களூரு டெஸ்டிலும் தொடருகிறது.