ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.
ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான் (29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டு இன்னிங்களிலும் முறையே 23 மற்றும் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் மூலம் அவர் 15 புள்ளிகளை இழந்தார். இப்போட்டிக்கு முன்னால் அவர் 934 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். இப்போது 919 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் உள்ளார். விராட் கோலி அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார்.