விளையாட்டு

“ஆக்சன் ரியாக்ஷன்” கோலிக்கு குவியும் பாராட்டு

webteam

இக்கட்டான சூழலில் சாதனைப் படைத்திருக்கும் கோலிக்கு பல தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவும், ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இவ்விரு அணிகள் மோதும் 5-டெஸ்ட் கொண்ட தொடர் நேற்று முன்தினம் தொடங்கின. பர்மிங் ஹாமில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தார். இதன்படி விளையாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரூட் 80 ரன்களும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

அதன் பின் விளையாடிய இந்திய அணியில் கோலி தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சியில் திணறினர். சிறப்பாக விளையாடிய கோலி 225 பந்துகளை எதிர்கொண்டு 149 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டியில் இது அவருடைய 22 சதம் என்றாலும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டி தொடங்குவற்கு முன் கோலி எங்கு வேண்டுமானாலும் சிறப்பாக விளையாடி தான் ஒரு‘ரன் மெஷின்’என நிரூபிக்கலாம். ஆனால் அவர் இங்கிலாந்து மண்ணில் திணறுவார் என அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு 10 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார் என உதாரணம் காட்டினார். இந்நிலையில் நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் இங்கிலாந்து மண்ணிலும் நான் ‘ரன் மெஷின்’தான் என சொல்லாமல் சொல்லி இருகிறார் கோலி. 

இக்கட்டான சூழலில் கோலி அடித்த இந்தச் சததின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் கோலி 23 ரன்னை எடுத்தபோது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை எட்டிய 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் கேப்டனாக 7000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா 164 போட்டியில் 7000 ரன்களை கடந்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ரூட்-க்கு சரியான பதிலடி கொடுத்திருப்பதாக ஒரு புகைப்படத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதில் மேலே இங்கிலாந்து அணி கேப்டன் ஃபிலிண்டாப் தனது சட்டையைக் கழற்றி சுழற்றும் புகைப்படமும் அதற்கு எதிரில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்றவுடன் கங்குலி ஆக்ரோஷமாக சட்டையை கழற்றும் பதிலடி புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதே புகைப்படத்தின் கீழே இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, சதமடித்த ஜோ ரூட், பேட்டை ஸ்டைலாக கீழேப் போட்டு ஊதுவது போலவும், அதன் எதிர் திசையில் கோலி ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதற்கு  “ஆக்சன் ரியாக்ஷன்” எனத் தலைப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.