'ஹர்திக் பாண்ட்யா போல இன்னொரு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் தமிழக வீரர் விஜய் சங்கரை அணிக்குத் தேர்ந்தெடுத்தோம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்குகிறது.
இந்தப் போட்டி பற்றி கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’இலங்கை தொடர் முடிந்த 2 நாட்களிலேயே, அடுத்த தொடருக்காக தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டி உள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. அதற்கு தகுந்த மாதிரியான பயிற்சி தேவை என்பதால் இலங்கை தொடருக்கு வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களை தயார் செய்யக் கோரினோம். தென்னாப்பிரிக்க பயணத்துக்கு ஒரு மாத காலம் அவகாசம் இருந்திருந்தால் எங்களை தயார்படுத்தி இருப்போம். தமிழக வீரர் விஜய் சங்கர் முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியில் இடம் பிடித்துள்ளார். அணிக்கு ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆல்ரவுண்டராக இருக்கிறார். இன்னொரு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் விஜய் சங்கரை அழைத்திருக்கிறோம். அவர் தன் இடத்தை முயன்று அடைந்திருக்கிறார்’ என்றார்.