விளையாட்டு

கங்குலி சாதனையை சமன் செய்தார் விராத்!

கங்குலி சாதனையை சமன் செய்தார் விராத்!

webteam

தென்னாப்பிரிக்காவில் நேற்று நடந்த முதல், ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கங்குலியின் சாதனையை சமன் செய்திருக்கிறார் விராத் கோலி.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான 6 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, 269 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி விராத் கோலி மற்றும் ரஹானேவின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 17 ஒரு நாள் போட்டிகளில் வென்று வந்த தென்னாப்பிரிக்க அணியின் தொடர் வெற்றிக்கு இந்தியா நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.

இந்தப் போட்டியில் விராத் கோலி சதம் அடித்தார். இது அவரது 33-வது சதம். இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கேப்டனாக கங்குலி 142 போட்டிகளில் 11 சதம் விளாசியிருந்தார். அதை சமன் செய்த விராத், 41 போட்டிகளிலேயே 11 சதத்தை அடித்துள்ளார். சேஸிங்கில் கோலி 20 சதங்கள் அடித்திருக்கிறார். அதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (22 சதம்) முதலிடத்திலும் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (13) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.