விளையாட்டு

கனவு நனவாச்சு: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ஹேப்பி!

கனவு நனவாச்சு: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ஹேப்பி!

webteam

இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து தவானும், புவனேஸ்வர் குமாரும் சொந்த காரணங்களுக்கான விடுவிக்கப்பட்டுள்ளனர். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மித வேகப்பந்து வீச்சிலும் விஜய் சங்கர் சிறப்பாக செயல்படுவார் என்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் முரளி விஜய்யுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழக ரஞ்சியில் சிறப்பாக விளையாடி வந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதுபற்றி விஜய் சங்கர் கூறும்போது, ’இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் கனவு. எனக்கும் இருந்தது. அது நிறைவேறி இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்துள்ளேன். அதனால் எந்த வரிசையில் இறங்குகிறேன் என்பது பிரச்னையில்லை. பந்துவீச்சிலும் சிறந்த ஆலோசனைகளை  பெற்றுள்ளேன். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி எனக்கு சிறந்த ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்’ என்றார்.

முதல் தர போட்டிகளில் விஜய் சங்கரின் சராசரி, 49.17. திருநெல்வேலியில் பிறந்த விஜய் சங்கர், ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். இவர் சிறந்த பீல்டரும் கூட.