உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது ஸ்பெஷலான விஷயம் என்று தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பயிற்சியின் போது பும்ராவின் பந்து தாக்கியதில் காயம் அடைந்த விஜய் சங்கர் உடல்நலம் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இல்லையென்றால் அவருக்குப் பதிலாக, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரில் ஒருவர் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், பிட்னஸ் டெஸ்ட்டில் நேற்று பங்கேற்ற விஜய் சங்கர், இன்றைய போட்டியில் ஆடுவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’’ உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது மிகவும் முக்கியமான தருணம். அந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியது என் நம்பிக் கையை அதிகரித்திருக்கிறது. அந்த போட்டி எனக்கு ஸ்பெஷலானது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் மிரட்டுவாரா என்று கேட்கிறார்கள். யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம். ரஷித்கான் குறுகிய ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்தான். அவர் கடந்த போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவருடன் விளையாடி இருக்கிறேன். அவரை போல வெவ்வேறு விதமாக பந்துவீசுவது முக்கியமானது என நினைக்கிறேன்’’ என்றார்.