விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: அபராஜித், விஜய் சங்கர் அபாரம், தமிழகம் 7 வது வெற்றி!

விஜய் ஹசாரே கோப்பை: அபராஜித், விஜய் சங்கர் அபாரம், தமிழகம் 7 வது வெற்றி!

webteam

விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் நேற்று நடந்த போட்டியில் தமிழக அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் உள்ள தமிழக அணி, ரயில்வேஸ் அணியுடன் நேற்று மோதியது. ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மணிஷ் ராவ் 55 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் பாபா அபராஜித் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய தமிழக அணி, 44.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் முகுந்த் 11 ரன்னிலும் முரளி விஜய் 6 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்த களமிறங்கிய பாபா அபராஜித்தும் (111 ரன்கள்) விஜய் சங்கரும் (72 ரன்கள்) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் மூலம் தொடர்ந்து 7-வது வெற்றியை பதிவு செய்துள்ள தமிழக அணி, கால்இறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது