விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறார் வெங்கடேஷ் பிரசாத்?  

JustinDurai

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.    

ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு மொத்தமாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தேர்வுக் குழுவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. நயன் மோங்கியா, மணிந்தர் சிங், சிவ சுந்தர் தாஸ், அஜய் ரத்ரா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஹேமங் பதானி இந்த பொறுப்பிற்கு விண்ணப்பித்ததாக செய்திகள் கசிந்தது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார். இவர்தான் இந்த போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

இந்திய அணிக்காக 1996 முதல் 2001 வரை 33 டெஸ்ட் மற்றும் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் பிரசாத், 292 விக்கெட் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகவும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அதோடு தேர்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவமும் வெங்கடேஷ் பிரசாத்துக்கு உண்டு. 2016 முதல் 2018 வரை 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் அவர் இருந்துள்ளார். இதனால் வெங்கடேஷ் பிரசாத்துக்கே தேர்வுக்குழு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தவற விடாதீர்: “இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவுதான்” - சூர்யகுமார் குறித்து ஜாஃபர் கவலை!