விளையாட்டு

“தல.. தல தான்” தோனி விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி!

“தல.. தல தான்” தோனி விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி!

rajakannan

தோனியை பார்ப்பதற்காகவே சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவேன் என்று கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வாட்சன் அரைசதம் அடித்ததால் சென்னைக்கு நல்ல தொடக்கம் இருந்த போதும் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் அந்த அணி தோல்வியை தழுவியது. 12 பந்துகளை சந்தித்த தோனி 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். கொல்கத்தா அணி சார்பில் ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்கள் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் வருண் சக்ரவர்த்தி, ராகுல் திரிபாதி இருவரும் உரையாடிய வீடியோ பதிவை ஐபிஎல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில், தோனிக்கு பந்துவீசும்போது அச்சமாக இருந்ததா? என வருண் சக்ரவர்த்தியிடம் திரிபாதி கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் அளித்த வருண் சக்ரவர்த்தி, “ஆமாம், ஆமாம். மூன்று வருடங்களுக்கு முன்பு, சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து ரசிகர் கூட்டத்தில் அமர்ந்து போட்டியை பார்த்து வந்தேன். தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே அப்போது மைதானத்திற்கு வந்தேன். இப்போது அவருக்கு நான் பந்துவீசியுள்ளேன். இது எனக்கு ஒரு நம்ம முடியாத தருணம். போட்டி முடிந்த பின்னர் தோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். தமிழில் ஒன்று சொல்வேன் 'தல.. தல.. தான்' ” என்றார்.