விளையாட்டு

பால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் !

பால் வியாபாரியின் மகன் இந்திய அணியின் கேப்டன் !

jagadeesh

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக பால் வியாபாரியின் மகன் பிரியம் கார்க் அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தையின் கனவுக்காக சாதிக்கத் துடிப்பதாக கார்க் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரியம் கார்க் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு வித்திட்டது கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை போட்டி. அதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் மற்றும் 5 அரை சதம் விளாசிய பிரியம், அந்த தொடரில் 867 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார்.

நம்பிக்கை நட்சத்திரமான பிரியம் கார்க், உத்தர பிரதேசத்தில் பால் வியாபாரியின் மகனாக பிறந்தார். தந்தை நரேஷ், வீட்டுக்கு வீடு பால் வியாபாரம் செய்தும், பள்ளி வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை ஓட்டியும் தன்னுடைய எதிர்காலத்திற்காக கடுமையாக உழைத்ததாக கார்க் தெரிவித்துள்ளார். 2011ல் தாய் இறந்து போகவே தந்தையின் தொடர் கவனத்தில் மீரட்டில் பயிற்சி மேற்கொண்டார்.

இந்திய கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தது போலவே, தனக்கும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்தான் உத்வேகம் அளித்ததாகவும், தன்னுடைய வீட்டில் டிவி இல்லாத நிலையில் அவரது போட்டிகளை காண்பதற்காக அருகிலுள்ள ஷோரூமில் மற்றவர்களை இடித்து தள்ளிக் கொண்டு போட்டிகளை கண்டதாகவும் மலரும் நினைவுகளை தெரிவித்தார் கார்க்.

தனக்காக பல தியாகங்களை செய்த தந்தை நரேஷின் கனவுகளுக்காக தான் சாதிக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெறுவேன் என்றும் பிரியம் கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.