விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் & மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோகோவிச்: காரணம் என்ன?

EllusamyKarthik

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ஜோகோவிச். செர்பியாவை சேர்ந்த இந்த 34 வயது வீரர் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவரை ஆஸ்திரேலிய அரசு தொடரில் பங்கேற்க அனுமதிக்க மறுத்ததோடு நாட்டை விட்டே வெளியேற்றியது உலகம் முழுவதும் பேசப்பட்டது. 

இந்நிலையில், ஜோகோவிச் தானாக முன்வந்து இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

“இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் எனது பெயர் போட்டியாளர்களில் ஒருவராக தானாகவே சேர்க்கப்பட்டது. இருந்தாலும் என்னால் அங்கு பயணம் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். அமெரிக்க அரசின் முகமையான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தனது கட்டுப்பாடுகளை மாற்றவில்லை.

அதனால் அமெரிக்காவில் என்னால் விளையாட முடியவில்லை. சிறப்புமிக்க இந்த தொடர்களில் விளையாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என ஜோகோவிச் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.