N Djokovic - B Shelton
N Djokovic - B Shelton web
விளையாட்டு

US Open Semi:ஜோகோவிச்சை எதிர்கொள்ளும் Ranking இல்லாத இளம் புயல்! நாட்டின் 20 வருட கனவை நோக்கிய பயணம்

Rishan Vengai

நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அல்கரஸ், ஜோகோவிச், டேனியல் முதலிய ஸ்டார் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Djokovic - Medvedev - Alcaraz

இந்த வரிசையில் தரவரிசையிலேயே இல்லாத ஒரு இளம் வீரரான (20 வயது) அமெரிக்காவின் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதும் அவர் அரையிறுதியில் எதிர்கொண்டு மோதவிருப்பது அவருடைய வயதின் எண்ணிக்கையைத் தாண்டி (23 முறை) கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜாம்பவான் ஜோகோவிச்சை எதிர்த்து. இந்நிலையில் 2003க்கு பிறகு கோப்பையே வெல்லாத தன்னுடைய நாட்டின் கனவுக்காக பென் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

12 வயது வரை டென்னிஸ் என்றால் பெரிய பரிட்சயமே இல்லை!

நீங்கள் ஒரு டென்னிஸ் ரசிகராக இருந்தால் பென் ஷெல்டனின் பெயரை முன்னமே கேள்விபட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த பென் காலிறுதிவரை எட்டியிருந்தார். ஆனால் பென்னின் அட்டகாசமான ஆஸ்திரேலிய ஓபன் தொடரானது காலிறுதியில் சக நாட்டு வீரரான டாமி பாலிடம் தோல்வியடைந்ததால் முடிவுக்கு வந்தது. தற்போது கிடைத்த வாய்ப்பை விட்டுத்தராத பென், நடப்பு அமெரிக்க ஓபன் காலிறுதியில் பிரான்ஸ் டியாஃபோவை வீழ்த்தி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளார். இதன் மூலம் 1992க்கு பிறகு இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது அமெரிக்க வீரர் என்ற பெருமையை ஷெல்டன் பெற்றுள்ளார்.

Ben Shelton

முன்னாள் உலக நம்பர் 55 பிரையன் ஷெல்டனின் மகனான பென் ஷெல்டன் தன்னுடைய 12 வயது வரை டென்னிஸ் விளையாட்டின் மீது அதீத விருப்பம் இல்லாமலே இருந்துவந்துள்ளார். அவருடைய பள்ளியில் கூட அவர் குவாட்டர்பேக் புட்ஃபால் வீரராகவே இருந்துள்ளார். பல்கலைக்கழக போட்டிகளில் அற்புதமாக செயல்பட்ட அவர் NCAA சாம்பியனாகவும் இருந்துள்ளார். ஆனால் அதற்கு பின் டென்னிஸை தொடர்ந்த பிறகு அவருடைய முன்னேற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

நாட்டின் 20 வருட கனவை நிஜமாக்குவாரா பென்? அல்கரஸ் போல் ஜோகோவிச்சை வீழ்த்த முடியுமா?

2003ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஆண்டி ரோடிக்கிற்குப் பிறகு ஆண்கள் ஒற்றையர் யுஎஸ் ஓபன் வெற்றியாளருக்கான அமெரிக்காவின் காத்திருப்பானது நீண்டுகொண்டே இருக்கிறது. தன் நாட்டின் 20 வருட கனவை பென் மெய்யாக்குவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் மூன்று பெரிய முதலைகளை முழுங்க வேண்டியிருக்கும். வரும் 9ஆம் தேதி அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டு விளையாடவிருக்கும் பென், தனக்கான வாய்ப்பிற்காக காத்திருப்பார் என்று தோன்றுகிறது.

N Djokovic - B Shelton

தற்போது தரவரிசையில் 47வது இடத்தில் இருக்கும் பென், அரையிறுதிக்கு முன்னேறியதற்கு பிறகான ரேங்கிங்கில் 19வது இடத்திற்கு முன்னேற்றம் பெறுவார். ஒருவேளை அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் டாப் ரேங்கிங்கிற்குள் இடம்பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

காலிறுதி வெற்றிக்கு பிறகு பேசியிருந்த பென், “அவர் (ஜோகோவிச்) 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அது எங்கேயோ இருக்கிறது. கடந்த 2 போட்டிகளுமே எனக்கு கடினமானதாக இருந்தது. இந்த போட்டிகளில் எனக்கு கொடுத்த ஆதரவை அடுத்த இரண்டு இரவுகளுக்கும் கொடுப்பீர்கள் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். தன் நாட்டின் கனவை சுமந்து நிற்கும் இச்சிறுவன் ஜோகோவிச்சுக்கு எதிராக ஏதாவது மேஜிக் நிகழ்ந்துவாரா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.