விளையாட்டு

போட்டி நடக்காதது வருத்தமே.. ரிசர்வ் நாள் இருந்தால் சிறப்பு : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

போட்டி நடக்காதது வருத்தமே.. ரிசர்வ் நாள் இருந்தால் சிறப்பு : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

rajakannan

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை என்றால் அரையிறுதிப் போட்டியின் இன்றைய முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. போட்டி கைவிடப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைகிறது.

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “துரதிர்ஷ்டவசமாக எங்களால் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியவில்லை. வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்புக்கு ரிசர்வ் நாள் இருந்தால் சிறப்பாக இருக்கும். இருப்பினும், கிரிக்கெட் போட்டிக்கான விதிமுறை உள்ளன. அவற்றை நாம் பின்பற்ற வேண்டும். தொடக்கம் முதலே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியிருந்தது. அப்படியில்லை என்றால் இன்றையப் போட்டி முடிவுகள் நமக்கு நல்ல முடிவை கொடுத்திருக்காது.

எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை என்றால் இன்று மிகவும் சோகமாக மாறியிருக்கும். அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிப்பெற்றதன் பெருமை அணியில் உள்ள அனைத்து வீரர்களையே சேரும். சஃபாலி, ஸ்மிருதி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதால் நிச்சயம் எங்களுக்கு சிறப்பானதுதான். இறுதிப் போட்டியில் சிறந்த கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம். அப்படி விளையாடினால் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். இரண்டாவது அரையிறுதியில் விளையாடவுள்ள தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டும் சிறந்த அணிகளே. அதனால், எந்த அணி இறுதிப் போட்டிக்கு வருகிறது என்பது பற்றி யோசிக்கவில்லை” என்றார்.

இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டி எங்களுக்கு இப்படி முடியும் என நினைக்கவில்லை. விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததுதான் இன்றைய முடிவுக்கு காரணம். அரையிறுதிப் போட்டி வரை வரவேண்டும் என்பதுதான் எங்களது இலக்காக இருந்தது. அதனை சிறப்பாக செய்துவிட்டோம். லீக் போட்டிகளில் பல சிறப்பான ஆட்டங்கள் எங்களிடம்இருந்தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள்” என்றார்.